கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளவும், ஒரு கட்சி நிகழ்வை திட்டமிடவும்தான் செல்வதாக சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்றும் அவர் கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, கட்சி அழைத்தால் மட்டுமே செல்வேன் என்று கூறியுள்ளார். முதலமைச்சர் பதவி விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக அண்மையில் டி.கே.சிவகுமார் கூறியிருந்த நிலையில், அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று இரண்டே ஆண்டுகளில் முதலமைச்சர் பதவி விவகாரம் மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
