சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 359 ரன்களை துரத்திப்பிடித்து சாதனை வெற்றி படைத்துள்ளது. போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பூவா தலையா வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ரோகித் சர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர்.மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். விராட் கோலி 90 பந்துகளிலும், கெய்க்வாட் 70 பந்துகளிலும் சதமடித்தனர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கெய்க்வாட்டுக்கு இது முதல் சதமாகும். கோலி 102 ரன்களிலும், கெய்க்வாட் 105 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கே.எல்.ராகுல் 66 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. பின்னர் 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம்-கேப்டன் டெம்பா பவுமா இணை இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. பவுமா 46 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த மேத்யூ பிரீட்ஸ்கேவும் மார்க்ரம்மும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தனர். அணி 289 ரன்கள் எடுத்திருந்தபோது, மார்க்ரம் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த டெவால்ட் பிரிவீஸ் 64 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் வெற்றிக்கு தேவையான ரன்களும், எஞ்சிய பந்துகளுக்குமான இடைவெளியும் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்க அணி 300 ரன்களைக் கடந்தபோது இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதியில் 4 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி துரத்திய 3ஆவது அதிகபட்ச இலக்கு இதுவாகும். சதமடித்து தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வித்திட்ட மார்க்ரம் ஆட்டநாயகன் விருது பெற்றார். இவ்வெற்றியின் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமமானது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
359 ரன்களை சேஸ் செய்து தெ.ஆப்ரிக்கா வெற்றி; கோலி, கெய்க்வாட் சதம் வீண்
