சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் முடியாததால், சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேலும் 10 நாட்களுக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சீரமைப்பு பணிகள் முடியாததால் சில ரயில்கள் மேலும் 10 நாட்களுக்கு, அதாவது இன்று (05.12.2025) முதல் வருகின்ற 14ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்தே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உழவன் எக்ஸ்பிரஸ் (16866), அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636), சேது எக்ஸ்பிரஸ் (22662), ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16752) ஆகிய ரயில்கள் வரும் 14ஆம் தேதி வரை தாம்பரத்திலேயே நிறுத்தப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் மறு வழித்தடத்தில் தாம்பரத்திலிருந்தே புறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் என்றும் தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
