மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? அல்லது வேறு அரசியலா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரித்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று முன் தினம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.
இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது……. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
