Skip to content

இன்று 300 விமானங்கள் ரத்து; திணறும் இண்டிகோ நிறுவனம்

நாட்டின் பல்வேறு நகரங்களில் ஐந்தாவது நாளாக இன்று 300-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். உள்நாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக் கட்டுப்பாடு கடந்த ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி, விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது. விமானிகளின் விடுப்பு நேரம் வாரத்திற்கு 36 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி இருந்தது. இதன் காரணமாக உள்நாட்டில் அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகினர். பிரச்னைக்கு மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி, டிசம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் இயல்புநிலை நிலை திரும்பும் எனக் கூறியிருந்தார். இதனிடையே, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான விமானங்களின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்தது. இதனால் பயணிகள் பேரதிர்ச்சியில் உறைந்தனர். இதுபோன்ற சூழலில், இண்டிகோ நிறுவனம் மேலும் 300-க்கும் மேற்பட்ட விமானங்களை இன்று (06.12.2005) ரத்து செய்துவிட்டது. இதன் காரணமாக மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *