சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் திமுக வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபமேற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி இந்து மக்கள் கட்சியினர், பாஜகவினர் மற்றும் பலர் திரண்டு தீபம் ஏற்றச் சென்றபோது அங்கு பிரச்னை ஏற்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற அமர்வில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதனிடையே, நீதிபதியின் தீர்ப்பு தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. திமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை நடத்தின. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையான வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நீதிபதி் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடிவு செய்தனர். தகுதி நீக்க தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும், அந்த அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டன. நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் பதவி நீக்கம் செய்யக்கோருவது தொடர்பான நோட்டீஸ் திமுக சார்பில் வழங்கப்பட்டது.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்; பதவி நீக்கக்கோரி திமுக நோட்டீஸ்
