Skip to content

பராக்! பராக்! பராக்!..மெஸ்சி வர்றாரு…! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்..!

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி மூன்று நாள் பயணமாக நாளை மறுதினம் (13.12.2025) இந்தியாவுக்கு வருகிறார். G.O.A.T. (‘greatest of all time’) என்றழைக்கப்படும் மெஸ்சி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள வீரர் ஆவார். தற்போது அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனுக்கான மேஜர் லீக் கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள மெஸ்சி

வெற்றியில் சிறந்த பங்காற்றிய மெஸ்சி இந்த சீசனில் மொத்தம் 43 கோல்கள் அடித்ததுடன், 26 கோலடிக்க உதவி புரிந்துள்ளார். மொத்தம் அவரது கோல் பங்களிப்பு 69 ஆகும். உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மெஸ்சிக்கு இந்தியாவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இதுபோன்ற சூழலில், 3 நாள் பயணமாக அவர் இந்தியாவுக்கு வருகை புரிகிறார். 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா வரும் அவர் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளிலல் பங்கேற்க உள்ளார்.

தனது 70 அடி உயர சிலையை திறக்கிறார் மெஸ்சி

நாளை மறுதினம் (13.12.2025) அதிகாலை கொல்கத்தாவிற்கு வந்துசேரும் மெஸ்சி, அங்கு நிறுவப்பட்டிருக்கும் அவரது 70 அடி உயர சிலையை திறந்து வைக்க உள்ளார். ஆனால், பாதுகாப்பு கருதி அவர் ஹோட்டலில் இருந்தபடியே காணொலி வாயிலாக சிலையை திறக்கிறார். இது உலகிலேயே மிகப்பெரிய மெஸ்சியின் சிலையாக இருக்கும். பின்னர் கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடைபெறும் கால்பந்து நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்கிறார். அவரைக்காண 70,000க்கும் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

டிச.15-ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் மெஸ்சி

அங்கிருந்து ஐதராபாத் செல்லும் அவர் இரவில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து காட்சிப் போட்டி ஒன்றில் விளையாடுகிறார். 14ஆம் தேதி மும்பைக்கு செல்லும் மெஸ்சி, அங்கு நடைபெறும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார். அவருடன் அர்ஜென்டினா நடுக்கள வீரர் ரோட்ரிகோ டி பால், மெஸ்சியின் நீண்டகால கிளப் வீரர் லூயி சுவாரெஸ் ஆகியோரும் இணைகின்றனர். முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் எழுவர் கால்பந்து கண்காட்சிப் போட்டியில் விளையாடுகிறார். பின்னர் 15ஆம் தேதி டெல்லி செல்லும் மெஸ்சி பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *