Skip to content

சென்னயில், MTC-ன் ‘பேருந்துக்கே முதல் உரிமை’ பரப்புரை: மக்கள் மத்தியில் கலவையான வரவேற்பு!

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) தனது பேருந்துகளுக்குச் சாலையோர முன்னுரிமை கோரி சமூக ஊடகங்களில் மேற்கொண்ட ‘பேருந்துக்கே முதல் உரிமை’ (Bus First) என்ற பரப்புரை, பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் பயணிகளைக் கையாளும் MTCயின் இந்தப் பரப்புரை, நிமிடங்களைச் சேமிப்பதற்காக அஜாக்கிரதையாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை நோக்கி முன்வைக்கப்பட்டது.

பொதுமக்களின் முக்கியப் புகார்கள்

பெரும்பாலானோர் இந்தப் பரப்புரையை விமர்சிப்பதற்குக் கூறும் முக்கியக் காரணங்கள்: பேருந்துகள் அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் அல்லது பேருந்து நிறுத்தங்களில் நிற்பதில்லை. ஓட்டுநர்கள் பொறுப்பற்ற முறையில் பேருந்துகளை இயக்குகின்றனர். குறிப்பாக ராஜீவ் காந்தி சாலையில் (OMR) சர்வீஸ் சாலைகளையும் பயன்படுத்துகின்றனர்.

“மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களால்தான் பிரச்னை”

இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களால்தான் மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிகப் பிரச்னை ஏற்படுவதாக பேருந்துகளில் பயணிப்போர் குறை கூறுகின்றனர். பொதுமக்களைத் தினந்தோறும் ஏற்றிச் செல்லும் மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் பொறுப்பைப் பார்க்கையில் பரிதாபமாக இருப்பதாக பல பயணிகளும் தெரிவிக்கின்றனர். கூகுள் மேப்ஸ்ஸில்கூட, இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் கார்கள் மற்றும் பேருந்துகளைவிடக் குறைந்த நேரத்தில் இலக்கை அடைகின்றன. இதற்குக் காரணம், அவர்களில் பலர் மற்ற வாகனங்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை என்றும் பயணிகள் குறிப்பிடுகின்றனர்.

பேருந்துகள் ஒரே நேரத்தில் திரள்வதால் நெரிசல்

பாரிமுனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கே.எம்.சி., அம்பத்தூர், திருமங்கலம், மத்திய கைலாஷ், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள நிறுத்தம் போன்ற இடங்களில், உச்ச நேரங்களில் பேருந்துகள் ஒரே நேரத்தில் வரிசையாக வந்து நிற்பதால், பேருந்தில் ஏறுவதும் இறங்குவதும் மிகவும் கடினமாகிறது எனக்கூறுகின்றனர், பயணிகள்.

“பேருந்துகள் ஆங்காங்கே, சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலின் நடுவிலேயே நிற்கின்றன. சரியான பேருந்தைக் கண்டறிவது கடினமாகி, அவசரத்தில் மற்ற பேருந்துகளை நோக்கி ஓட வேண்டியுள்ளது. கூட்டம் கூட்டமாக மக்கள் விரைகின்றனர்” என்று தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர், பல பயணிகள்.

மாநகரப் போக்குவரத்து அதிகாரிகளின் விளக்கம்

‘பேருந்துக்கே முன்னுரிமை’ பரப்புரை குறித்துப் பேசிய மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் குறித்த நேரத்தில் தங்கள் இலக்குகளை அடைய உதவுவதன் அவசியத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்தவே இந்தப் பரப்புரை தொடங்கப்பட்டதாகக் கூறினார்.

ராஜீவ் காந்தி சாலையில் அணுகு சாலைகளைப் பேருந்துகள் பயன்படுத்துவது குறித்துப் பதிலளித்த அந்த அதிகாரி, மெட்ரோ ரயில் பணிகளுக்காகச் சாலையின் பாதிப் பகுதி பயன்படுத்தப்படுவதால், பிரதான சாலைக்கும் அணுகு சாலைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிவது கடினம். மேலும், சோழிங்கநல்லூர் சந்திப்புக்கு அருகிலுள்ள சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லும் பேருந்துகளுக்கு இடதுபுறம் திரும்பி அணுகு சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் விளக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *