ஊரகப் பகுதி வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் கடந்த இருபது ஆண்டுகளாகப் புரட்சியை ஏற்படுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA அல்லது மன்ரேகா) மாற்றாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
MNREGA இனி G RAM G என்றழைக்கப்படும்
‘விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (கிராமீன்)’ என்பதே இந்த புதிய மசோதாவின் முழுப் பெயராகும். சுருக்கமாக இது VB G RAM G (விபி ஜி ராம் ஜி) அல்லது ஜி ராம் ஜி என அழைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்திnல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதா, 2047-ஆம் ஆண்டிற்கான ‘விக்சித் பாரத்’ அதாவது ம்பட்ட இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நோக்கில் ஒரு புதிய கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்களும் புதிய சலுகைகளும்
மன்ரேகா திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதி மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கான வேலை உறுதி அளிக்கப்பட்ட நிலையில், ஜி ராம் ஜி மசோதாவில் குறிப்பிடத்தக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய திட்டம், வேலை முடிந்த ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்யும். மேலும், குறித்த காலக்கெடுவுக்குள் ஊதியம் வழங்கப்படாவிட்டால், வேலையின்மைக்கான உதவித்தொகை வழங்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது ஊரகத் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் பணப் பலன்களை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம்?: பிரியங்கா
கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றப்படுவதன் நோக்கம் என்னவென்று
காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றுவதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து அவர் வினவியுள்ளார்.
மகாத்மா காந்தியின் பெயரை ஏன் நீக்குகிறீர்கள்?: பிரியங்கா
“மகாத்மா காந்தியின் பெயரை ஏன் நீக்குகிறார்கள்? அவர் மிகப்பெரிய இந்தியத் தலைவராகக் கருதப்படுகிறார்; இதன் நோக்கம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. நாடாளுமன்றம் செயல்படவில்லை; நாம் அழுத்தமான பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பது இல்லை; நேரமும் பொதுப் பணமும் வீணடிக்கப்படுகிறது” என்று அவர் கவலை தெரிவித்தார.
மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ள காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ரஞ்சன், பாஜகவுக்கு முன்னர் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி மீது பிரச்னை இருந்தது. “இப்போது பாபு (மகாத்மா காந்தி) மீதும் அவர்களுக்குள் பிரச்னை இருப்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.
