இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்சியை மும்பையின் வான்கடே மைதானத்தில் சந்தித்த பின்னர், நெகிழ்ச்சியான ஒரு பதிவை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இந்த ‘சூப்பர் சண்டே’ சந்திப்பு விளையாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு பெரிய திருவிழாவாக மாறியது. கிரிக்கெட்டுக்கும் கால்பந்துக்கும் இடையே நடக்கும் போட்டி விவாதங்கள் ஒருபுறம் ஒதுங்கி நிற்க, உலகின் இரண்டு பெரிய விளையாட்டு அடையாளங்களான இந்த இரு ஜாம்பவான்களும் சந்தித்தது நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
’10/10′ நாள் – வேகமாகப் பரவும் சச்சினின் ட்வீட்
வான்கடே மைதானத்தில் நடந்த மெஸ்ஸியின் வருகை நிகழ்வில், சச்சின் அவரைச் சந்தித்தார். கால்பந்து உலகில் மெஸ்சி 10-ஆம் எண் ஜெர்சியையும், கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 10-ஆம் எண் ஜெர்சியையும் அணிந்து விளையாடியவர்கள். இந்தச் சிறப்புமிக்க எண்ணைக் குறிப்பிட்டு சச்சின் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில், “லியோ மெஸ்ஸி, இன்று ஒரு 10/10 நாளாக இருந்தது என்பதை நான் நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்” என்று பதிவிட்டு, அவருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தச் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வைரலானது.
வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட விழா
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2011 உலகக் கோப்பை வெற்றி, விராட் கோலியின் 50-வது ஒருநாள் சதம் போன்ற பல முக்கியமான தருணங்களுக்குச் சாட்சியான வான்கடே மைதானம், அன்று இசை, கால்பந்து, கிரிக்கெட், பாலிவுட் மற்றும் அரசியல் எனப் பல துறைகளின் பிரபலங்கள் சங்கமித்த ஒரு மாபெரும் நிகழ்விடமாக மாறியது.
பிரபல டி.ஜே. சேதஸ் (DJ Chetas) மற்றும் மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. ‘மெஸ்சி, மெஸ்சி’ என்ற கோஷத்தால் மைதானம் அதிர்ந்தது.
ரசிகர்கள் ஆரவாரம்; வான்கடே மைதானத்தில் குவிந்த நட்சத்திரங்கள்
இந்திய நட்சத்திரங்கள் மற்றும் மித்ரா நட்சத்திரங்கள் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் இந்தியக் கால்பந்து ஐகான் சுனில் சேத்ரி, நடிகர்கள் டைகர் ஷெராஃப், ஜிம் சர்ப் போன்றோர் பங்கேற்றனர்.
பெரும் ஆரவாரத்துடன் மெஸ்சி, அவரது இன்டர் மியாமி எஃப்சி அணியின் சக வீரர்களான லூயிஸ் சுவாரஸ் (Luis Suarez) மற்றும் ரோட்ரிகோ டி பால் (Rodrigo De Paul) ஆகியோரும் மைதானத்திற்குள் நுழைந்தனர்.
சுனில் சேத்ரி உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர்களை மெஸ்சி சந்தித்தார். இளம் கால்பந்து வீராங்கனைகளுக்கான ‘புராஜெக்ட் மஹாதேவா’ திட்டத்தின் சிறுமிகளுடன் மெஸ்சி பந்தை உதைத்து உற்சாகப்படுத்தினார்.
சச்சின் மற்றும் மெஸ்சி இணைந்த தருணம்
விழாவின் இறுதிக் கட்டத்தில், நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உச்சகட்ட தருணம் வந்தது. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரும், கால்பந்தின் GOAT மெஸ்சியும் மேடையில் இணைந்தனர். மெஸ்ஸிக்கு இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் வழங்கினார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் உடன் நிற்க, இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது அந்த நாளின் மிகச் சிறந்த காட்சியானது
