டெல்லியில் இன்று காங்கிரஸ் சார்பில் “வாக்குத் திருடன், அரியணையைவிட்டு நீங்கு” என்ற தலைப்பில் பிரமாண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நேரடியாக ஒரு சவாலை விடுத்தார்.
வாக்குச் சீட்டு முறைப்படி ஒரு நியாயமான தேர்தலைச் சந்தித்து, அதில் வெற்றி பெற முடியுமா என அவர் கேள்வியெழுப்பினார்.
“நீங்கள் நேர்மையான முறையில் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டால், உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இந்த உண்மை பாஜகவுக்கு நன்றாகவே தெரியும்” என்று பிரியங்கா காந்தி ஆவேசமாகக் கூறினார்.
தேர்தல் ஆணையர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைத் தேர்தல் ஆணையர்கள் குலைத்துவிட்டதாக பிரியங்கா குற்றஞ்சாட்டினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்தூ, விவேக் ஜோஷி ஆகியோரை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய பிரியங்கா, நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் மீதும், தேர்தல் நடைமுறைகள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு அடியும் சந்தேகம் நிறைந்தது”
“தேர்தல் அறிவிப்பு முதல் வாக்காளர் பட்டியல், நடத்தை விதிகள், பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் முடிவுகள் வரை ஒவ்வொரு அடியையும் அவர்கள் சந்தேகத்திற்குரியதாக ஆக்கிவிட்டனர்” என்று பிரியங்கா கடுமையாகச் சாடினார்.
வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் புகார்
அத்துடன், நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளால் இளைஞர்கள் தத்தளிப்பதாகவும் பிரியங்கா குறிப்பிட்டார். மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே, வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களைப் போதைப் பழக்கம் மற்றும் சூதாட்ட செயலிகளை நோக்கித் தள்ளுகிறது என்று பிரியங்கா விமர்சித்தார்.
