ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC) நடைபெற்ற விவாதத்தின் போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத, ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும், அது எப்போதும் அவ்வாறே தொடரும் என்றும் இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா உறுதியான மறுப்பு
ஐ.நா பாதுகாப்பு சபையில் அமைதிக்கான தலைமைத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தின் போது, ஐ.நா-விற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரீஷ் பி (Ambassador Harish P) உரையாற்றினார். அப்போது அவர், பாகிஸ்தான் பிரதிநிதி ஜம்மு காஷ்மீர் குறித்துப் பேசிய கருத்துகளை முழுமையாக நிராகரித்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்; அவை கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்று ஹரீஷ் பி ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தேவையற்ற தலையீடு என இந்தியா கண்டனம்
பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தைக் கிளப்புவது, இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதில் அவர்களுக்கு இருக்கும் வெறித்தனமான கவனத்தை காட்டுகிறது என்று இந்தியா சாடியது. ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துக் கூட்டங்களிலும், தளங்களிலும் பாகிஸ்தான் தனது பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதாகவும், இது ஒரு பொறுப்புள்ள உறுப்பினருக்கு அழகல்ல என்றும் இந்தியா சுட்டிக்காட்டியது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் பயங்கரவாதம்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்தும் இந்தியா தனது கவலையைப் பதிவு செய்தது. 65 ஆண்டுகளுக்கு முன்பு நல்லெண்ண அடிப்படையிலும், நட்புறவின் அடையாளமாகவும் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், பாகிஸ்தான் கடந்த பல தசாப்தங்களாக மூன்று போர்களைத் தொடுத்தும், ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தைச் சிதைத்துவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது.
குறிப்பாக, ஏப்ரல் 2025-ல் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சுட்டிக்காட்டிய ஹரீஷ் பி , இதில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நினைவுக்கூர்ந்தார். பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகச் செயல்படும் பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது
