சென்னை மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் முதற்கட்டமாக, பூந்தமல்லி – போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் (சுமார் 10 கி.மீ.) ரயில் சேவை தொடங்குவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கவிருக்கும் நிலையில், அதன் தொடக்க விழா குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. டிசம்பர் மாதத்தில் தொடக்க விழா நடைபெறும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த மாதம் (ஜனவரி 2026) இந்த விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு?
இந்த முக்கியமான திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் இணைந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த விழாவில், பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பது, இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடமாக அமையும் பூந்தமல்லி – போரூர் சேவை, சென்னை நகரின் மேற்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். இந்தப் புதிய மெட்ரோ சேவை, முக்கியமாக இந்தப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும், பயணிகளுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
