Skip to content

விஜய்யின் ஈரோடு பரப்புரை; தவெக தலைமை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

ஈரோடு மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கிலான வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைமை வெளியிட்டுள்ளது.

இந்த நெறிமுறைகளின் முழு விவரம் பின்வருமாறு:

  1. நேரம் தவறாமை: பரப்புரை நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர வேண்டும். கடைசி நிமிட நெரிசலைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2. அடையாள அட்டை: தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை கட்டாயம் அணிந்துவர வேண்டும். இது பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் அனுமதிக்கு அத்தியாவசியமானது.

3. வாகன நிறுத்தம்: கூட்டத்திற்கான வாகனங்களை குறிப்பிட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். காவல்துறை மற்றும் தவெக தன்னார்வலர்களின் அறிவுறுத்தலின்படி வாகனங்களை நிறுத்துவது அவசியம்.

4. போதைப் பொருட்கள் தடை: பரப்புரை நடைபெறும் இடத்திற்கு மதுபானம் உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருட்களையும் எடுத்து வரவோ, அவற்றை உபயோகிக்கவோ கண்டிப்பாக அனுமதி இல்லை.

5.பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகள்-பொருட்கள் அனுமதி: கூர்மையான ஆயுதங்கள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், பெரிய பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிற பொருட்களை எடுத்து வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

6. தன்னார்வலர்களுக்கு ஒத்துழைப்பு: பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும், கழகத்தின் தன்னார்வலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிவுரைகளைப் பின்பற்றி கூட்டத்தை ஒழுங்கமைக்க உதவ வேண்டும்.

7. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில், அவர்கள் அமர்வதற்கான அல்லது நிற்கும் இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒதுக்குதல் வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான முதலுதவி ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

8. கூட்ட நெரிசலைத் தவிர்த்தல்: தலைவர் உரையாற்றும் மேடையை நோக்கி அதிக அளவில் முண்டியடித்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்து அசாதாரண சூழலை உருவாக்கலாம்.

9. சுகாதார வழிமுறைகள் மற்றும் வசதிகள்; வெப்பத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகள் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10. முதலுதவி: அவசரகால முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மையங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *