உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, தனது இந்தியப் பயணம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
“நமஸ்தே இந்தியா”- ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மெஸ்சி
தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நமஸ்தே இந்தியா!” என்று தொடங்கி மெஸ்சி ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் சென்றது ஒரு மறக்க முடியாத அனுபவம்; உங்கள் அன்பான வரவேற்பிற்கும், உபசரிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்; இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சச்சின் உடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சி
இந்த “GOAT” (Greatest of All Time) இந்தியச் சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சமாக, மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை மெஸ்சி சந்தித்தார். இருவரும் ஜெர்சிகளைப் பரிமாறிக்கொண்ட அந்த வரலாற்றுத்
தருணம் ரசிகர்களைப் சிலிர்க்க வைத்தது.
பாலிவுட் நட்சத்திரங்கள் உடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி
மும்பை பயணத்தின் போது பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் மற்றும் அவரது மகன்கள் தைமூர், ஜே (Jeh) ஆகியோரை மெஸ்சி சந்தித்தார். மெஸ்சியின் தீவிர ரசிகரான குட்டி ஜே, மெஸ்சியை வியந்து பார்த்த காட்சிகள் அவரது வீடியோவில் இடம்பெற்றுள்ளன. கரீனா கபூர் இந்தத் தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மெஸ்சியின் வருகை
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற கடைசிநாள் நிகழ்வில், மெஸ்சி இளம் கால்பந்து வீரர்களுடன் கலந்துரையாடினார். மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்குக் கையசைத்த அவர், கால்பந்துகளை ரசிகர்களை நோக்கி உதைத்து உற்சாகப்படுத்தினார். மினெர்வா அகாடமி இளம் வீரர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
