ஐபிஎல் 2026 ஏலத்தில் பலரது புருவங்களை உயர்த்த வைத்த பெயர் கார்த்திக் சர்மா. வெறும் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்தில் நுழைந்த இந்த 19 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் போட்டிக்குப் பிறகு 14.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய கார்த்திக் சர்மாவின் இந்த வெற்றிக்கு பின்னால் பல ஆண்டுகால வலியும், தியாகமும் ஒளிந்துள்ளன.
மகனின் கனவுக்காக கரைந்த நகைகளும் நிலங்களும்..!
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரைச் சேர்ந்த கார்த்திக்கின் குடும்பம் மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டது. கார்த்திக்கின் தந்தை மனோஜ் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர். காயம் காரணமாக அவரது கிரிக்கெட் கனவு பாதியிலேயே முடங்கியது. தனது கனவை மகன் மூலமாக நனவாக்க விரும்பிய அவர், அதற்காகச் செய்த தியாகங்கள் ஏராளம்.
கார்த்திக்கின் பயிற்சிக் கட்டணம் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்காக அவரது தாயார் ராதா தனது நகைகளை விற்றார். குடும்பத்திற்குச் சொந்தமான விளைநிலங்கள் மற்றும் வீட்டு மனைகளும் மகனின் முன்னேற்றத்திற்காக விற்கப்பட்டன.
இரவு நேர தங்கும் விடுதியும் ஒருவேளை உணவும்
ஒருமுறை குவாலியரில் நடைபெற்ற தொடரில் பங்கேற்கச் சென்றபோது, கார்த்திக் மற்றும் அவரது தந்தை தங்குவதற்குப் பணம் இல்லாமல் தவித்தனர். கையில் இருந்த சொற்பப் பணம் தீர்ந்துபோன நிலையில், இருவரும் பேருந்து நிலையத்திலுள்ள இரவு நேர தங்கும் விடுதியிலேயே உங்களின். “பணம் இல்லாததால் ஒருநாள் இரவு முழுவதும் நாங்கள் பட்டினியாகக் கூட இருந்திருக்கிறோம். அந்தத் தொடரில் வெற்றி பெற்று பரிசுத் தொகை கிடைத்த பிறகுதான் ஊருக்குத் திரும்ப முடிந்தது” என மனோஜ் உருக்கத்துடன் நினைவு கூர்கிறார்.
நான்கு ஆண்டுகால காத்திருப்பும் விடாமுயற்சியும்..!
வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் அணிகளில் விளையாடிய கார்த்திக், அதன்பின் 4 ஆண்டுகள் எந்தவொரு முக்கிய அணிக்கும் தேர்வு செய்யப்படவில்லை. பலரும் நம்பிக்கையை கைவிட்ட போதும், கார்த்திக் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். அந்த உழைப்பே அவரை ரஞ்சி கோப்பை மற்றும் தற்போது ஐபிஎல் வரை கொண்டு வந்துள்ளது.
தோனியுடன் விளையாட பேரார்வம் கொண்டுள்ள கார்த்திக்
ஏலத்தில் சிஎஸ்கே அணி தன்னை வாங்கியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த கார்த்திக், மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து விளையாடுவதையும் அவரிடமிருந்து விக்கெட் கீப்பிங் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதையும் ஆவலோடன் எதிர்நோக்கியுள்ளார்.
“விடாமுயற்சியும் குடும்பத்தின் ஆதரவும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்பதற்கு கார்த்திக்கின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். தாயின் நகைகளும், தந்தையின் தியாகமும் இன்று வீண் போகவில்லை. கோடிகளில் புரண்டாலும், தனது 12-ம் வகுப்பு படிப்பைத் தொடரப்போவதாகவும், எப்போதும் எளிமையாக இருப்பேன் என்றும் கூறும் இந்த இளைஞன், பல ஏழை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உத்வேகம்!
