பங்களாதேஷில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த எழுச்சிக் குழுவின் முக்கிய தலைவரான ஷெரீப் ஹாதி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூரில் காலமானார். இச்சம்பவம் பங்களாதேஷில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துப்பாக்கிச் சூடும் மருத்துவ சிகிச்சையும்
கடந்த வாரம் டாக்காவின் பிஜாய்நகர் பகுதியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கவிருந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், இடைக்கால அரசு அவரை மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தது. அங்கு ஆறு நாட்களாக உயிருக்குப் போராடி வந்த அவர், நேற்றிரவு (18.12.2025) உயிரிழந்தார்.
இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் இரங்கல் செய்தி
ஷெரீப்பின் மறைவை அறிவித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய முகமது யூனுஸ், “ஷெரீப் உஸ்மான் ஹாதி ஜூலை எழுச்சியின் அச்சமற்ற போராளி. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது” என்று புகழஞ்சலி செத்தார். மேலும், இந்த கொடூரமான கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்டப்படாது என்றும் அவர் உறுதியளித்தார். சனிக்கிழமையை (20.12.2025) தேசிய துக்க தினமாக அறிவித்துள்ள அரசு, அன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வெடித்த வன்முறையும் போராட்டங்களும்
ஷெரீப்பின் மரணச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, டாக்காவின் ஷாபாக் சந்திப்பில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களான ‘புரோதோம் ஆலோ’ (Prothom Alo) மற்றும் ‘டெய்லி ஸ்டார்’ (The Daily Star) அலுவலகங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் நாட்டின் ஜனநாயகப் பாதைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் மீண்டும் வன்முறை
பங்களாதேஷில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற வன்முறைகள் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சட்டத்தை கையில் எடுக்காமல் பொறுமை காக்குமாறும் முகமது யூனுஸ் விடுத்துள்ள அழைப்பு, ஒரு அமைதியான ஜனநாயக மாற்றத்திற்கு மிகவும் அவசியமானதாகும். உயிரிழந்த தலைவரின் கனவான ‘ஜனநாயக பங்களாதேஷை’ உருவாக்க வன்முறையற்ற பாதையே சரியான தீர்வாக அமையும்.
