சென்னை விமானநிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாததால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுமுறையை கழிப்பது வழக்கம்.
விடுமுறைக்காலம் என்பதால் பேருந்துகளில் கட்டணக்கொள்ளை
அந்த வகையில், நாளை (14.12.2025) அரையாண்டு தொடர் விடுமுறை தொடங்குகிறது, நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
போதிய விமானங்களின்றி மக்கள் கடும் அவதி
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி அடைந்துள்ளனர். தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் செல்லும் நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் இல்லாததால், பெங்களூரு அல்லது திருவனந்தபுரம் வழியாக சுற்றிக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் டிக்கெட் விலை, அதிக பயண நேரம் என பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறையைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் கட்டணக்கொள்ளை
சில விமான நிறுவனங்கள் விமானங்களை குறைத்துவிட்டதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இயக்கப்படும் விமானங்களிலும் விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு விமானப்போக்குவரத்துத் துறை தீர்வுகாண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
