அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்வெஸ்டன் விரிகுடா (Galveston Bay) பகுதியில் மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சோகமான சம்பவத்தில், தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விபத்துக்குள்ளானது எப்படி?
மெக்சிகன் கடற்படை விமானம் (Beechcraft Super King Air 350), மெக்சிகோவின் மெரிடாவிலிருந்து கால்வெஸ்டன் சர்வதேச விமான நிலையத்திற்கு மருத்துவ உதவி பணிக்காகச் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் நான்கு கடற்படை அதிகாரிகள் உட்பட எட்டு பேர் இருந்தனர். திங்கள்கிழமை மதியம் 3:15 மணியளவில் கால்வெஸ்டன் பாலம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
இந்த விமானத்தில் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒரு சிறு குழந்தையும் இருந்தது. மெக்சிகோவைச் சேர்ந்த தீக்காயமடைந்த குழந்தைகளுக்கு உதவும் ‘மிச்சோ மற்றும் மௌ’ (Michou and Mau) அறக்கட்டளை மூலம் இந்த மருத்துவப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, விமானம் தரையிறங்கும் போது கடலில் விழுந்ததில் 2 வயது குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானதை அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.
மீட்புப் பணிகள் மற்றும் விசாரணை
விபத்து நடந்த உடனேயே உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் மீட்புப் பணியில் இறங்கினர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிலர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடர் மூடுபனி காரணமாக பார்வைத் திறன் குறைவாக இருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இணைந்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெச்கிகன் கடற்படை இரங்கல்
மருத்துவ உதவிக்காகச் சென்ற ஒரு விமானம் இலக்கை அடையும் முன்.பே விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மெக்சிகன் கடற்படை மற்றும் அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மெக்சிகன் தூதரகம் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து தகவல்களைச் சேகரித்து வருகிறது.
