Skip to content

விஜய ஹசாரே கோப்பை; ரோகித் அதிரடி சதம் – சிக்கிம் அணிக்கு எதிராக மும்பை அபார வெற்றி!

இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை (Vijay Hazare Trophy) தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் இன்று (24.12.2025) நடைபெற்ற குரூப் சி லீக் போட்டியில் மும்பை மற்றும் சிக்கிம் அணிகள் மோதின. நீண்ட இடைவேளைக்குப் பிறகு உள்நாட்டுப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் பரவசப்படுத்தியுள்ளார்.

ரோகித் ருத்ரதாண்டவம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிக்கிம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. சிக்கிம் அணி ஓரளவு சவாலான இலக்கை நிர்ணயித்தாலும், மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் அதனை மிகவும் எளிதாக்கினார்.

ஆரம்பம் முதலே சிக்கிம் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த ரோகித், வெறும் 62 பந்துகளில் சதம் விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 94 பந்துகளில் 155 ரன்கள் குவித்து மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.

மும்பை அணியின் ஆதிக்கம்

ரோகித்துடன் தொடக்க வீரராக களமிறங்கிய அங்க்ரிஷ் ரகுவன்ஷி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் ரோஹித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் மற்றும் பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பிய விதம், அவர் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வந்துள்ளதை உறுதிப்படுத்தியது. மும்பை அணி வெறும் 30.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது.

ரோகித் அதிரடி; ரசிகர்களின் உற்சாகம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரோகித் மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாகவும், ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவும் அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ‘ஹிட்மேன்’ ரோகித்தின் ஆட்டத்தைக் காண திரண்டிருந்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ரோகித்தின் இந்த அதிரடி ஃபார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகும். விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணி தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியிருப்பது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *