Skip to content

பொருநை அருங்காட்சியகம்; இரண்டே நாட்களில் 3,000 பேர் கண்டுகளிப்பு!


திருநெல்வேலி, டிச.25; திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் கரைகளின் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களை கொண்ட பொருநை அருங்காட்சியகம் நேற்று முன்தினம் (23.12.2025) முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதனை முதல் இரண்டே நாட்களில் சுமார் 3,000 பேர் கண்டுகளித்தனர்.

4 அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த இந்த அருங்காட்சியகம் 4 அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. அறிமுக கூடத்தில், 17 நிமிட திரைக்காட்சி மூலம் அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் விளக்கப்படுகின்றன.

சிவகளை அரங்கில், இரும்பு பயன்பாடு, உருக்கும் தொழில்நுட்பம், டிஜிட்டல் போர்டு மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள்

ஆதிச்சநல்லுார் அரங்கில், பண்டைய தமிழர்களின் வாழ்வியல், பயன்பாட்டு பொருட்கள் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளன. கொற்கை அரங்கில், பாண்டியர் கால கடல்சார் வணிகம், ரோமாபுரி தொடர்பு, முத்துக் குளித்தல் விவரிக்கப்படுகிறது. துலுக்கர்பட்டி அரங்கில், தமிழ் பிராமி உள்ளிட்ட எழுத்துகள் கொண்ட தொன்மை ஓடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பொருநை ஆற்றின் தொன்மை குறித்த, 7டி தியேட்டரில், 15 நிமிடங்கள் நடக்கும் காட்சியும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்திணைகள் குறித்த 5டி தியேட்டரிலும் மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து மணிக்கு ஒரு முறை பேருந்து

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என, 11 பஸ்கள் ரெட்டியார்பட்டிக்கு இயக்கப்படுகின்றன. குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு, 20 ரூபாய். பள்ளி மாணவர்களுக்கு, 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திறந்திருக்கும் நேரம் மற்றும் விடுமுறை நாட்கள்

அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் (நுழைவுச் சீட்டு மாலை 6 மணி வரை வழங்கப்படும்).

விடுமுறை: வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அளிக்கப்படும்.

பழங்கால தமிழர்களின் நாகரிகத்தைப் பறைசாற்றும் இந்த அருங்காட்சியகம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *