அபுஜா, டிச,26; வடமேற்கு நைஜீரியாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அரசு (ISIS) பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நேரடி உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்கான பின்னணி
கடந்த சில வாரங்களாக நைஜீரியாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்நிலையில், “இன்றிரவு (25.12.2025) எனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது கொடிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க ஆப்பிரிக்கா கட்டளையகத்தின் (AFRICOM) அறிக்கை
அமெரிக்காவின் ஆப்பிரிக்கா கட்டளையகம் வெளியிட்டுள்ள செய்தியில், நைஜீரிய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க சோகோடோ (Sokoto) மாநிலத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை வேரோடு அறுப்பதில் அமெரிக்க இராணுவம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல் – நைஜீரியாவின் நிலைப்பாடு
நைஜீரிய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கா உனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் பயங்கரவாதிகளைத் துல்லியமாகத் தாக்குவது ஆகிய நோக்கங்களுக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக நைஜீரியா விளக்கம் அளித்துள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகாண அமெரிக்கா நடவடிக்கை
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி டிரம்ப் எடுத்துள்ள இந்த ராணுவ நடவடிக்கை, பிராந்திய பாதுகாப்பில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
