Skip to content

பாமகவின் பிளவுக்கு திமுகவே காரணம் என் அன்புமணி தரப்பு குற்றச்சாட்டு; தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் எச்சரிக்கை!

சேலம்,டிச.31; பாமகவில் ஏற்பட்டுள்ள பிரிவுக்கு திமுகவே காரணம் என்று பாமகவின் அன்புமணி தரப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

சேலத்தில் நேற்று (30.12.2025) பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், சேலத்தில் பாமக பொதுக்குழு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர்; தேர்தல் நேரத்தில் இப்படி அழுது நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என விமர்சித்தார்.

வெற்றிக் கூட்டணியை அமைப்போம்: அன்புமணி தரப்பு உறுதி

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வலிமையான மற்றும் வெற்றிக் கூட்டணியை அமைக்கும்; தமிழ்நாடு மக்களின் நலனை முன்னிறுத்தி, அன்புமணியின் வழிகாட்டுதலின்படி இந்த கூட்டணி அமையும், என்று கார்த்தி கூறினார்.

அன்புமணியை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடிப்பதற்கான அல்லது ஆட்சியில் முக்கியப் பங்கு வகிப்பதற்கான பணிகளில் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

பாமக பிரிவுக்கு திமுகவே காரணம் எனக் குற்றச்சாட்டு

பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரிவுக்கு திமுக தான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய கார்த்தி, அக்கட்சிக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்றும் கார்த்தி தெரிவித்தார்.

அன்புமணியைப் பற்றி பேசுவதற்கு ஜி.கே.மணிக்கு எந்தத் தகுதியும் இல்லை எனக் குறிப்பிட்ட கார்த்தி, தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பொங்கல் பண்டிகைக்கு யாருடன் கூட்டணி என அறிவிக்கப்படும் என்று கார்த்தி கூறினார்.

தேர்தல் வியூகமும் தொண்டர்களின் உற்சாகமும்

கடந்த தேர்தல்களில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, இந்த முறை சரியான கூட்டணிக் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதில் பா.ம.க தலைமை மிக கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. சமூக நீதி மற்றும் வளர்ச்சி அரசியலை முன்வைத்து மக்களைச் சந்திக்க பா.ம.க திட்டமிட்டுள்ளது. சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசியலில் பாமக தீர்மானிக்கும் சக்தியாக திகழுமா?

தமிழ்நாடு அரசியலில் பாமக எப்போதும் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது. “வெற்றிக் கூட்டணி” என்ற இவர்களின் அறிவிப்பு, மற்ற பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸின் தலைமையில் பா.ம.க அமைக்கப்போகும் அந்த ‘வெற்றிக் கூட்டணி’ எது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *