டெஹ்ரான், ஜன.02; ஈரானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு காரணமாக, அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள இந்தப் போராட்டங்களில், தற்போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது அந்நாட்டைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரியால் மதிப்பு வீழ்ச்சியும் மக்கள் கொந்தளிப்பும்
ஈரானிய நாணயமான ரியால் (Riyal) அமெரிக்க டாலருக்கு எதிராக இதுவரை இல்லாத அளவு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்தமாத இறுதியில், பணவீக்கம் 42 சதவீதத்தைத் தாண்டியது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் முதலில் டெஹ்ரானின் பெரிய கடைவீதிகளில் (Grand Bazaar) கடையடைப்பு போராட்டத்தைத் தொடங்கினர்.
வன்முறையாக மாறிய போராட்டங்கள்
தொடக்கத்தில் அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது ஈரான் முழுவதும் பரவியுள்ளன. மேற்கு ஈரானின் லோர்தேகன் (Lordegan) மற்றும் குதாஷ்ட் (Kuhdasht) போன்ற நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
அரசுத் தரப்பில், போராட்டக்காரர்களின் கல்வீச்சு மற்றும் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாணவர்களும் வணிகர்களும் கைகோர்ப்பு
வணிகர்களுடன் இணைந்து தற்போது பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெஹ்ரான் பல்கலைக்கழகம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ‘சுதந்திரம்’ மற்றும் ‘பொருளாதார நீதி’ வேண்டி முழக்கமிட்டு வருகின்றனர். 2022-ல் நடந்த மாஹ்சா அமினி போராட்டங்களுக்குப் பிறகு, ஈரான் எதிர்கொள்ளும் மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக இது பார்க்கப்படுகிறது.
மக்கள் போராட்டம் தீவிரம் -ஈரானின் எதிர்காலம் என்ன?
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்கத் தயார் என்று கூறினாலும், மறுபுறம் போராட்டங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டு நிர்வாகச் சீர்கேடுகள் ஈரானை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளன. அமைதி திரும்புமா அல்லது இந்த எதிர்ப்புப் போராட்டம் ஒரு பெரும் புரட்சியாக மாறுமா என உலக நாடுகளில் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
