திருச்சி,ஜன.02; இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள் விளங்கி வருகிறது. இதனை வேரோடு ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கைகோர்த்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிராக வைகோ நடையயணம் -தொடக்க விழா
போதைப்பொருளுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் நடைபயண தொடக்க விழா திருச்சியில் இன்று (02.01.2026) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”தனது பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டின் குறுக்கும், நெடுக்குமாக, தனது காலடி படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடைபயணம் சென்றவர் வைகோ; ஒரு இளைஞருக்குரிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அவரிடம் நாம் பார்க்கிறோம்; இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இந்த பயணத்தை தொடங்கியுள்ள வைகோவுக்கு வாழ்த்துகள் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வைகோவுக்கு வயது 82ஆ அல்லது 28ஆ!
82 வயதாகிறதா? 28 வயதாகிறதா என்று சொல்லும் அளவுக்கு அவரது (வைகோ) செயல்பாடு உள்ளது; திராவிட பல்கலைக்கழகத்தில் படித்தவர் வைகோ; கருணாநிதியின் அருகே இருந்து அரசியல் கற்றவர், இந்த நடைபயணத்தில் எந்த பயன் இருக்கிறது எனக் கேட்கலாம். இப்படியான நடை பயணங்களால்தான், தலைவர்கள் மக்களிடம் எளிய முறையில் சென்று தங்களது கருத்துகளை சொல்ல முடியும். அப்போதுதான் நடைபயணத்தின் தேவையை மக்கள் பேசுவார்கள் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருல் தனிநபர் சார்ந்த பிரச்னை அல்ல: முதலமைச்சர் ஸ்டாலின்
போதைப்பொருள் என்பது ஒரு தனிநபர் சார்ந்த பிரச்னை அல்ல, அது ஒரு மாபெரும் சர்வதேச நெட்வொர்க் (Network) என்று குறிப்பிட்டார். இதனைத் தகர்க்க மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை அவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உரையின் முக்கிய அம்சங்கள்
இளைஞர்களின் நல்வழி: இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்க தமிழ்நாசு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் பங்கு: மாநில எல்லைகளைக் கடந்து போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்; சர்வதேச மற்றும் மாநில எல்லைகள்தான் போதைப்பொருள் ஊடுருவலுக்கு நுழைவு வாயிலாக உள்ளன; அவற்றை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
சமூகத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
முதலமைச்சர் தனது உரையில் அரசுடன் இணைந்து பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்:
பெற்றோரின் பொறுப்பு: தங்கள் குழந்தைகளை போதைப்பொருள் பாதையில் செல்லாமல் பொறுப்போடு வளர்க்க வேண்டும்.
திரைத்துறையினருக்கு வேண்டுகோள்: சினிமாவில் போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள்: ஆசிரியர்கள் மற்றும் சமூகப் பிரபலங்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்களிடையே தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு என்புது சமூகத்தின் கூட்டு முயற்சி: ஸ்டாலின்
“போதைப்பொருள் ஒழிப்பு என்பது ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை ‘போதைப்பொருள் இல்லாத மாநிலமாக’ மாற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்பதே இந்த உரையின் சாராம்சமாகும்.
