Skip to content

ஆஸ்திரேலிய ஓபன் 2026; 45 வயதில் வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் வீனஸ் வில்லியம்ஸ்!

மெல்போர்ன்,ஜன.02; டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீனஸ் வில்லியம்ஸ், வரவிருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெட்டியில் விளையாட ‘வைல்ட் கார்டு’ (Wild Card) நுழைவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். 45 வயதிலும் தனது அதீத திறமையால் ரசிகர்களை வியக்க வைக்கும் அவர், இந்தத் தொடரின் மூலம் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைக்க உள்ளார்.

டென்னிசில் வைல்டு கார்டு (Wild Card) என்றால் என்ன?

டென்னிஸில், வைல்ட் கார்டு என்பது ஒரு போட்டியில் பங்கேற்கும் ஒரு சிறப்பு நுழைவு ஆகும், இது தரவரிசை அல்லது தகுதிப் போட்டிகளில் தகுதி பெறாத ஒரு வீரருக்கு அமைப்பாளர்களால் வழங்கப்படுகிறது, இது அடிப்படையில் பிரதான டிராவில் விளையாட ஒரு “அழைப்பு” ஆகும். இவை பெரும்பாலும் நம்பிக்கைக்குரிய இளம் வீரர்கள், உள்ளூர் விருப்பமானவர்கள், முன்னாள் சாம்பியன்கள் மீண்டும் களமிறங்குபவர்கள் அல்லது ஆண்டி முர்ரே அல்லது வீனஸ் வில்லியம்ஸ்போன்ற கூட்டத்தையும் ஊடகங்களையும் ஈர்க்கும் பெரிய பெயர்களுக்கு வழங்கப்படுகின்றன .

5 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்ன் திரும்பும் வீனஸ்

கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வீனஸ் வில்லியம்ஸ் மீண்டும் மெல்போர்ன் பூங்காவிற்குத் திரும்புகிறார். 7 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரான இவர், ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை 54 வெற்றிகளையும் 21 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார்.

45 வயதில் ஒரு புதிய மைல்கல்

இந்த 2026 தொடரில் பங்கேற்பதன் மூலம், ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் பிரதான சுற்றில் (Main Draw) விளையாடும் மிக வயதான பெண்மணி என்ற சாதனையை வீனஸ் படைக்கவுள்ளார். இதற்கு முன்பு ஜப்பானின் கிமிகோ டேட் (Kimiko Date) தனது 44-வது வயதில் விளையாடியதே சாதனையாக இருந்தது. 28 ஆண்டுகளுக்கு முன்பு (1998-ல்) இதே மைதானத்தில் அறிமுகமான வீனஸ், இன்று வரை தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

வெற்றிகரமான கடந்த காலம்

வீனஸ் வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டு முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளார் (2003 மற்றும் 2017). இந்த இரண்டு முறையும் தனது சகோதரி செரீனா வில்லியம்ஸிடம் வெற்றியைப் பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றையர் ஆட்டத்தில் மட்டுமின்றி, இரட்டையர் பிரிவிலும் நான்கு முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.

வீனஸின் நெகிழ்ச்சியான பேச்சு

மீண்டும் களமிறங்குவது குறித்து வீனஸ் கூறுகையில், “ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்புவதில் நான் மிகுந்த உற்சாகமடைகிறேன். ஆஸ்திரேலிய ரசிகர்கள் எப்போதும் எனக்கு முழு ஆதரவை அளித்துள்ளனர். எனது டென்னிஸ் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகளைத் தந்த இந்த இடத்திற்கு மீண்டும் வருவது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

வினஸ் திருமணத்திற்குப் பிறகுபங்கேற்கும் முதல் பெரிய தொடர்

வீனஸ் வில்லியம்ஸ், திருமணத்திற்குப் பிறகு பங்கேற்கும் முதல் பெரிய தொடர் இதுவாகும். வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கத் துடிக்கும் வீனஸின் இந்த வருகை, இளம் வீரர்களுக்குப் பெரும் உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *