Skip to content

வெனிசுலாவை அமெரிக்கா வழிநடத்தும்; அதிபர் டொனால்டு டிரம்பின் அறிவிப்பால் அதிரும் உலகநாடுகள் – பதற்றத்தில் கராகஸ்!


கராகஸ்,ஜன.04; வெனிசுலா தலைநகர் கராகஸில் நேற்று (03.01.2026) அதிகாலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் உலகையே அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் நேரடி ராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிவிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கராகஸில் நிகழ்ந்த நள்ளிரவுத் தாக்குதல்

ஜனவரி 3, 2026 அன்று அதிகாலை 2 மணியளவில் கராகஸ் நகரில் குறைந்தது ஏழு பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. தாழ்வாகப் பறந்த விமானங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் நகரமே அதிர்ந்தது. குறிப்பாக ‘போர்ட் தியுனா’ (Fort Tiuna) ராணுவத் தளம் மற்றும் ‘லா கார்லோட்டா’ விமானத் தளம் ஆகிய இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

அதிபர் மதுரோ கைது – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா வெனிசுலா மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்,” என்று உறுதிப்படுத்தினார்.

மேலும், மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெனிசுலாவை அமெரிக்கா வழிநடத்தும்”

மாரி-ஏ-லாகோவில் (Mar-a-Lago) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், வெனிசுலாவில் ஒரு முறையான மற்றும் பாதுகாப்பான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவே அந்நாட்டைத் தற்காலிகமாக “நிர்வகிக்கும்” என்று கூறினார். வெனிசுலாவின் உடைந்த நிலையில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பைச் சீரமைக்க அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அங்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாடுகளின் எதிர்வினை; ஐநா சபை கண்டனம்

வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தத் தாக்குதலை “மனிதாபிமானமற்ற மற்றும் கோழைத்தனமான செயல்” என்று கண்டனம் செய்துள்ளார். மதுரோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், இந்தச் சம்பவம் ஒரு “ஆபத்தான முன்னுதாரணத்தை” ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ளன.

அமெரிக்காவின் தலையீட்டால் அரசியல் மாற்றங்கள் நிகழுமா?

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் ஆட்சி மாற்றம் மற்றும் அமெரிக்காவின் நேரடித் தலையீடு தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுலாவின் எதிர்காலம் இப்போது சர்வதேச நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *