சென்னை,ஜன.07; தமிழ்நாடு அரசியல் களம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணியை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீட்டை முடிப்பதிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்த முக்கியத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று (07.01.2026) சந்தித்துப் பேசினார். சிறிதுநேர ஆளோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகிவிட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும், எத்தனை தொகுதிகள் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
பா.ம.க.வுக்கான தொகுதிகள்: 23-லிருந்து 17-ஆக குறைகிறதா?
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தற்போது பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருவதால், கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றது. இதனால் இம்முறை தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்களின்படி, இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 17 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த முறையை விட 6 தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட உள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
பின்னணி என்ன?
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சி இரண்டு அணிகளாக இயங்கி வருகிறது. ராமதாஸ் அணியில் 2 எம்.எல்.ஏ.க்களும், அன்புமணி அணியில் 3 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த உட்கட்சி மோதல்கள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பா.ம.க.வின் பேரம் பேசும் சக்தியைச் சற்றே குறைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வடமாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கிதான் தீர்மானிக்கும் சக்தி!
தமிழ்நாடு தேர்தலைப் பொறுத்தவரை பா.ம.க.வின் வாக்கு வங்கி வட மாவட்டங்களில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. தொகுதிகள் குறைந்தாலும், ராஜ்யசபா சீட் மற்றும் முக்கியத் தொகுதிகளைப் பெறுவதன் மூலம் தனது செல்வாக்கை நிலைநிறுத்த அன்புமணியின் பா.ம.க. திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
