Skip to content

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் ஏமாற்றம்?

சென்னை,ஜன.08; இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்கவில்லை

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திடம் (CBFC) தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பொறுத்தவரை, இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை . படத்தின் சில காட்சிகள் அல்லது அரசியல் வசனங்கள் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகன் பட வழக்கில் நாளை தீர்ப்பு

ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (09.01.2026) தீர்ப்பளிக்க உள்ளது.

ஜனவரி 9-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பட ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது தயாரிப்பு நிறுவனம்

அதில், “கனத்த இதயத்துடன் இந்த தகவலை பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் திரைப்பட வெளியீடு நமது கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தைச் சுற்றிய எதிர்பார்ப்பு, ஆர்வம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாக புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு நம் யாருக்குமே எளிதான ஒன்று அல்ல. புதிய வெளியீட்டுதேதி விரைவில் அறிவிக்கப்படும்.

ரசிகர்கள் பொறுமை காத்திட நிறுவனம் வேண்டுகோள்

அது வரை உங்களுடைய பொறுமையையும், நீடித்த அன்பையும் கோருகிறோம். உங்களின் ஆதரவு தான் எங்களுக்கும், ஒட்டுமொத்த ஜனநாயகன் படக்குழுவுக்கும் மிகப்பெரிய பலம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தற்போதைய நிலையும்

விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால், ‘ஜனநாயகன்’ மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தமிழகம் முழுவதும் பிரமாண்டமான கட்-அவுட்கள் மற்றும் முன்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களுக்குச் சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *