Skip to content

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை; பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்காக காத்திருக்கும் தெற்கு ரயில்வே

சென்னை,ஜன.08; சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பறக்கும் ரயில் (MRTS) திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பறக்கும் ரயில் விரிவாக்கத் திட்டம் – ஒரு பார்வை

வேளச்சேரியிலிருந்து புனித தோமையார் மலை (St. Thomas Mount) வரையிலான 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள பறக்கும் ரயில் விரிவாக்கப் பணிகள் ரூ.734 கோடி செலவில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இரண்டு புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஆய்வு மற்றும் சோதனை ஓட்டம்

இந்த புதிய பாதையில் சேவையைத் தொடங்க, தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி மிகவும் அவசியமாகும்.

ஏற்கனவே டீசல் இன்ஜின் மூலம் சரக்கு ரயில்களைக் கொண்டு பலமுறை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

தற்போது பாதுகாப்பு சான்றிதழுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து பச்சைக்கொடி காட்டியவுடன், இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடக்கத் தேதி

முதலில் இந்தப் புதிய சேவையை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகத் தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், தற்போதுள்ள நிலவரப்படி, ஜனவரி மாத இறுதிக்குள் சேவை தொடங்குவது கடினம் என்றும், பிப்ரவரி மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோவுடன் இணையும் பறக்கும் ரயில் சேவை

பறக்கும் ரயில் (MRTS) சேவையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துடன் இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

முதற்கட்டமாக இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி மற்றும் திருவான்மியூர் ஆகிய 6 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையங்களில் தரைத்தளம் மாற்றுதல், பாதுகாப்பு வசதிகளை அதிகரித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகளை மாற்றும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ண்ண்ட…கால கனவு விரைவில் நனவாகிறது!

சென்னைவாசிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் இணைப்பு விரைவில் நனவாகப்போகிறது. இது பயன்பாட்டிற்கு வரும்போது, தென் சென்னை மற்றும் சென்னையின் முக்கிய இடங்களுக்கு இடையேயான பயண நேரம் பெருமளவு குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *