Skip to content

‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம்: விஜய்க்கு ‘கை’ கொடுக்கும் காங்கிரஸ்! புதிய கூட்டணி உருவாகிறதா?

சென்னை,ஜன.08; தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் காங்கிரஸ் இடையிலான நெருக்கம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான புதிய அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜய்யின் கடைசித் திரைப்படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் காட்டும் அதீத ஆர்வம் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

திமுக கூட்டணியில் விரிசல்?

தற்போது தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது. இருப்பினும், வரும் தேர்தலில் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுக தலைமை இதற்கு இதுவரை பச்சைக்கொடி காட்டவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மாற்று வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

விஜய்க்கு ‘கை’ கொடுக்கும் காங்கிரஸ்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகள் குரல் கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி – விஜய் பேச்சுவார்த்தை?

சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜய்யுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதாகவும், பிரவீன் சக்கரவர்த்தி நேரடியாக விஜய்யைச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரத் தயாராக இருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இறுதிக்கட்ட முடிவு எப்போது?

இந்த மாத இறுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றனர். அப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தனது இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பக்கம் சாய்கிறதா காங்கிரஸ் பேரியக்கம்?

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப் பங்கீடு விவகாரங்கள் இழுபறியாக உள்ள நிலையில், விஜய்யின் பக்கம் காங்கிரஸ் சாயத் தொடங்கியிருப்பது தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ பட விவகாரம் என்பது வெறும் ஆரம்பப்புள்ளிதான், இதன் பின்னணியில் பெரிய அரசியல் மாற்றம் ஒளிந்திருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *