சென்னை,ஜன.09; தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி குறித்த விவாதங்கள் டெல்லி வரை எதிரொலித்து வருகின்றன. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
56 தொகுதிகள் இலக்கு: அமித் ஷாவின் வியூகம்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவிடம் அதிகாரப் பங்கீடு தொடர்பான புதிய கோரிக்கையை பாஜக முன்வைத்துள்ளது.
ஆட்சி அமைந்தால் பாஜகவுக்கு குறைந்தது 3 அமைச்சரவை இடங்கள் வழங்க வேண்டும் என அமித் ஷா கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனுடன், தேர்தலில் போட்டியிட 56 தொகுதிகளை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
அதிகாரப் பங்கீடு குறித்து உடனடி உறுதி அளிக்க பழனிசாமி மறுத்ததாக அதிமுக தரப்பு கூறுகிறது.
தேர்தலுக்கு முன் இத்தகைய வாக்குறுதி அளிப்பது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என அதிமுக தரப்பில் கருதுகிறது.
ஆட்சியில் பங்கு என்றால், எதிர்க்கட்சிகளுக்கு வசதியாகிவிடும்?
“அதிமுக வென்றால் பாரதிய ஜனதா ஆட்சி” என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் என்பதால் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இவ்விசயத்தில், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் விருப்பம் மற்றும் மாநில உரிமைகளை முன்னிறுத்தி அவர் தனது முடிவை எடுப்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வலுவான கூட்டணியை அமைக்க பாஜக முனைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக முயற்சி செய்து வரும் வேளையில், 3 அமைச்சரவை இடங்கள் மற்றும் 56 தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் யூகமா அல்லது வரும் தேர்தலுக்கான ஆரம்பப்புள்ளியா என்பது விரைவில் தெரியவரும்.
