திண்டிவனம்,ஜன.09; தமிழ்நாடு அரசியலில் ‘கூட்டணி கணக்குகளை’ தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. கடந்த சில தேர்தல்களாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் நீடித்து வந்த பாமக, தற்போது ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியிருப்பது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ்-அன்புமணி மோதல்; இரு அணிகளாக செயல்பாடு
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே அண்மைக்காலமாக மோதல் நிலவி வருகிறது. இருவரும் கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் (07.01.2026) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதாக தெரிவித்தார்.
ஆனால், “பாமக நிறுவனரான தான் எடுக்கும் முடிவே செல்லும். அன்புமணி கூட்டணி வைத்தது செல்லாது” என்று ராமதாஸ் அறிவித்தார்.
தேர்தலில் போட்டியிட ராமதாஸ் மகள் விருப்ப மனு!
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாமகவில் விருப்ப மனு வழங்கும் பணியை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் இன்று (09.01.2026) காலை தொடங்கி வைத்தார்.
அப்போது ராமதாஸின் மகளும், பாமகவின் செயல் தலைவருமான காந்திமதி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மருத்துவர் ராமதாஸ், “பாமகவில் இரு அணிகள் கிடையாது. தனது தலைமையிலான அணிதான் பாமக என்று கூறினார்.
திமுக ஆட்சி நன்றாகத்தான் உள்ளது என புகழாரம்
வரவிருக்கும் தேர்தலில் தாங்கள் விரும்பிய வெற்றியை பெறுவோம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது. பாமக செயல் தலைவர் காந்திமதி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், “திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்ட கேள்விக்கு, “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லாமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
காலை உணவு வழங்கும் திட்டம் புரட்சிகரமானது: ராமதாஸ்
“மக்களைத் தேடி மருத்துவம்” மற்றும் “காலை உணவுத் திட்டம்” போன்ற திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாகப் பாராட்டினார். குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார்.
எப்போதும் ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டி அறிக்கை விடும் ராமதாஸ், திடீரெனப் பாராட்டு மழையில் நனைத்தது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கூட்டணி மாற்றத்திற்கான அஸ்திவாரமா?
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. இருப்பினும், எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சியால் பெற முடியவில்லை. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாமக தனது அரசியல் பாதையை மாற்றிக்கொள்ளத் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
