Skip to content

வாரணாசி ‘கூடார நகரம்’: சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டனம்!

வாரணாசி,ஜன.10; வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஆடம்பர ‘கூடார நகரம்’ (Tent City), சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

சுற்றுச்சூழல் விதிமீறல்கள் மற்றும் NGT-யின் அதிரடி உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியின் படுகையில் 2023-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கூடார நகரம், சுற்றுச்சூழல் சட்டங்களை காற்றில் பறக்கவிட்டு உருவாக்கப்பட்டதாக பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இந்தத் திட்டம் கங்கை நதி (புத்துயிர் அளித்தல், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) அதிகார அமைப்பு ஆணை, 2016-ன் விதிகளை மீறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடார நகரத்தால் நதிப்படுகை மாசுடடுவதாக அதிருப்தி

நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, இந்த கூடார நகரத்தால் நதிப்படுகை மாசுபடுவதாகவும், அங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தது. மேலும், அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கங்கை நதியில் கலப்பதாக எழுந்த புகாரையும் தீர்ப்பாயம் கவனத்தில் கொண்டது.

அபராதமும் எதிர்காலத் தடையும்

இந்த விதிமீறல்களுக்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு தலா ₹17 லட்சம் சுற்றுச்சூழல் இழப்பீடு (Environmental Compensation) விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் வசூலிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வருங்காலங்களில், கங்கை நதி மற்றும் அதன் கிளை நதிகளின் கரைகளில் இத்தகைய கூடார நகரங்களை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்றும் தீர்ப்பாயம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

திட்டத்தின் பின்னணி

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக வாரணாசி வளர்ச்சி ஆணையத்தால் பொது-தனியார் பங்களிப்பு முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஜனவரி 13, 2023 அன்று பிரதமர் மோடி இதனைத் திறந்து வைத்தார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இது ஒரு சிறந்த தங்குமிடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முறையான அனுமதி இன்றி நதிப்படுகையில் கட்டுமானங்களை மேற்கொண்டது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

சுற்றுலா மேம்பாடு அவசியம்; இயற்கையும் அப்படியே..!

சுற்றுலா மேம்பாடு அவசியமானது என்றாலும், அது இயற்கையையும் புனிதமான கங்கை நதியையும் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் இடையே சமநிலையை பேண வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *