Skip to content

எண்ணூர் அமோனியா முனையத்தை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு; இன்று விசாரணை?

சென்னை,ஜன.12; சென்னை அருகே, எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் அமோனியா சேமிப்பு முனையம் மற்றும் கடல்சார் குழாய்களை நிரந்தரமாக மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

திருவொற்றியூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 2023 டிசம்பரில் எண்ணூரில் ஏற்பட்ட அமோனியா கசிவு சம்பவத்தை மையமாக வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (12.01.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனுதாரரின் முக்கிய கோரிக்கைகள்

மனுதாரர் தனது பிரமாணப் பத்திரத்தில் முன்வைத்துள்ள முக்கிய அம்சங்கள்:

நிரந்தர மூடல்: அமோனியா இறக்குமதி, சேமிப்பு மற்றும் அது சார்ந்த அபாயகரமான செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பாதுகாப்பு குறைபாடு: 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட கசிவின் போது, 15 நிமிடங்களில் சுமார் 67 டன் அமோனியா கசிந்தது. ஆனால், அங்குள்ள சென்சார்கள் எதனாலும் இதனை முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை.

உடல்நல பாதிப்பு: இக்கசிவால் 52-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காற்றின் தரம் மற்றும் கடல் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 முதல் 10 மடங்கு அதிகமாக ரசாயனக் கலப்பு இருந்தது.

சுற்றுச்சூழலுக்கு கேடு: கசிவு காரணமாக 18 வகையான சுமார் 1,860 மீன்கள் உயிரிழந்துள்ளன. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

போபால் விஷவாயு விபத்துடன் ஒப்பீடு

1984-ம் ஆண்டு நடந்த போபால் விஷவாயு விபத்தை மேற்கோள் காட்டியுள்ள மனுதாரர், எண்ணூரிலும் அதே போன்ற ஒரு அபாயகரமான நிலை நிலவுவதாக எச்சரித்துள்ளார். பழைய உள்கட்டமைப்பு, தோல்வியடைந்த பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஆகியவை பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விரோத செயல்பாடு குறித்த குற்றச்சாட்டு

மத்திய மற்றும் மாநில அரசுகளின் உரிய அனுமதி இல்லாமல், குறிப்பாக முறையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி பெறாமல் இந்த முனையம் செயல்பட்டு வருவதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 1995-ல் வழங்கப்பட்ட பழைய அனுமதியை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பயன்படுத்துவது சட்டப்படி செல்லாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எண்ணூர் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள கோரிக்கை

எண்ணூர் மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எண்ணூர் பகுதி மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு ஒரு விடிவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *