சென்னை,ஜன.13; பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு என்று முதல் அமைச்சர் மு.க.ஸடாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தைத்திங்கள் திருநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தைத்திங்கள் மகிழ்ச்சி கூடுதலாக இருப்பதை காண முடிகிறது
அதில், தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள்; இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள்; உழைப்பைப் போற்றுகின்ற திருநாள்; தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள்; அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை சீற்றங்களின்போதும் உழவர்களுக்கு துணை நின்றோம்
கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு; பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா; அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது; ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது; பெண் ஆண் என்ற பாகுபாடு கிடையாது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிரந்தரக் கொரோனா போல் தாக்கும் மத்திய பாஜக அரசு
எல்லாருக்குமான திருநாள் பொங்கல்; எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்; ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் மத்திய பா.ஜ.க அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது பொங்கல் கடிதத்தில் பெருமதித்துடன் குறிப்பிட்டுள்ளார்.
