Skip to content

தமிழ் கலாசாரம் உலகெங்கும் பரவியுள்ளது; டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி,ஜன.14; தைப்பொங்கல் திருநாளையொட்டி, டெல்லியில் இன்று (14.01.2026) மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் பாரம்பரியத்தின்படி வேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். விழாவில் மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட பிரபலங்களும், நீதிபதிகளும் பங்கேற்றனர்.

தமிழில் பொங்கல் வாழ்த்துக்கூறி பேசிய பிரதமர் மோடி

பொங்கல் விழாவில் பேசிய பிரதமர் மோடி, “வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தமிழில் வாழ்த்து தெரிவித்து உரையைத் தொடங்கினார். நாட்டின் பாரம்பரியத்தில் தமிழ் கலாசாரம் பரவியுள்ளது. அதுமட்டுமல்ல, மனிதகுலத்தின் பகிரப்பட்ட பாரம்பரியமாகவும் விளங்குகிறது; நான் பேசும் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வு, பொங்கல் போன்ற பண்டிகைகளால் மேலும் வலுப்பெறுகிறது; தமிழ் கலாச்சாரத்தில், விவசாயி வாழ்க்கையின் அடித்தளமாகக் கருதப்படுகிறார்; நமது விவசாயிகள் நாட்டைக் கட்டமைப்பதில் வலிமையான பங்களிப்பாளர்களாக உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

தமிழக உழவர்கள் விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்த அழைப்பு

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது; விவசாயத்தில் ஈடுபட்டுள்ள எனது இளம் தமிழ் நண்பர்கள், இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, விவசாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பிரதமரை முதன்முறையாக சந்தித்தது குறித்து எஸ்கே மகிழ்ச்சி

டெல்லி பொங்கல் விழாவில் கலந்துகொண்டது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை முதன்முறையாக நேரில் பார்த்தது மறக்க முடியாத தருணம் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை- காங்கிரஸ் கட்சியினர் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மோடி பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன்; காங்கிரஸ் கண்டனம்

இதனிடையே, டெல்லியில் பிரதமர் மோடி கொண்டாடிய பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், டெல்லியில் நடைபெற்ற காவி கும்பலின் பொங்கலில் பராசக்தி குழு கலந்துகொண்டது வன்மையாகக் கண்டித்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *