Skip to content

மிரளவைத்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 22 காளைகளை அடக்கிய இளைஞருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசு!

அவனியாபுரம், ஜன.16; தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில், நேற்று (15.01.2026) உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில் காளைகளை வென்ற காளையருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக, ஆண்டுதோறும் பொங்கலையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றவையாகும். இவற்றைக் காண தமிழ்நாடு மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் வருகை புரிவது வழக்கம்.

2026ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு

அதன்படி, இவ்வாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் நேற்று (15.01.2026) ஆர்ப்பரிக்கும் உற்சாகத்துடன் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க 573 காளையர் பதிவு செய்திருந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் 561 பேர் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 937 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்

காலை 7.30 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு, 12 சுற்றுகளாக விறுவிறுப்புடன் நடந்து மாலை 6.30 மணியளவில் நிறைவுற்றது.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வென்றிட இளங்காளையர் ஆர்வத்துடன் களம் கண்டனர். சில காளைகளை அருகில்கூட நெருங்க முடியாமல் காளையர் திணறினர்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த காளையருக்குப் பரிசுகள்!

இறுதியில் 22 காளைகளை லாவகமாக அடக்கிய வளையங்குத்தைச் சேர்ந்த பாலமுருகன் முதலிடம் பிடித்தார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.

17 காளைகளை வென்ற அவனியாபுரம் கார்த்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து மோட்டார் சைக்கிளை பரிசாக வென்றார். 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

பிடிபடாமல் நின்று விளையாடிய காளையின் உரிமையாளருக்கு டிராக்டர்!

மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடிய விருமாண்டி பிரதர்ஸ் மந்தை முத்துக்கருப்பணின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. சுமார் 60 வினாடிகள் யாரையும் நெருங்க விடாமல் சீறிப்பாய்ந்து விளையாடிய இந்தக் காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவ முகாம்களில் சிகிச்சை

காளைகள் முட்டியதில் வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 55-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பார்வையாளர்களும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *