ஜல்னா,ஜன.17; பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர், மகாராஷ்டிராவின் ஜல்னா மாநகராட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர்
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஜல்னா மாநகராட்சியின் 13-வது வார்டில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் போட்டியிட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் பிற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடித்து, 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி இந்த வார்டில் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை.
அரசியல் பின்னணி மற்றும் சர்ச்சைகள்
ஸ்ரீகாந்த் பங்கர்கர் 2001 முதல் 2006 வரை பிளவுபடாத சிவசேனாவின் சார்பில் மாமன்ற உறுப்பினராக (Corporator) பதவி வகித்தவர். 2011-ல் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் தீவிர இந்துத்துவ அமைப்பான ‘இந்து ஜனஜாக்ருதி சமிதி’யில் இணைந்தார்.
கௌரி லங்கேஷ் கொலை வழக்கைத் தவிர, 2018-ல் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாத தடுப்புப் படையினரால் (ATS) அவர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கௌரி லங்கேஷ் கொலை வழக்கும் தற்போதைய நிலையும்
செப்டம்பர் 5, 2017 அன்று பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 2021-ல் பங்கர்கர் மீது கர்நாடக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், செப்டம்பர் 4, 2024 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.
மீண்டும் சிவசேனாவில் சேர முயன்ற பங்கர்கர்!
சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அவர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் மீண்டும் இணைய முயன்றார். ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் காரணமாக முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கர்கரை கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை. தற்போது சுயேச்சையாக நின்று அவர் பெற்றுள்ள வெற்றி, உள்ளூர் அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவரின் வெற்றி தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஒரு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இது அறநெறி சார்ந்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜல்னா மாநகராட்சியில் பங்கர்கரின் வெற்றி, வரவிருக்கும் காலங்களில் மகாராஷ்டிர அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
