வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதி, 1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதுவரை 11 முறை தேர்தலை சந்தித்துள்ள அணைக்கட்டு தொகுதியில் ஏழு முறை அதிமுகவும், மூன்று முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. பாமக ஒரு முறை வென்றுள்ளது.
1980ஆம் ஆண்டு இத்தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர், ஜி.விஸ்வநாதன். VIT எனப்படும் வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான இவர், 1991 முதல் 1993 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்போது அவர் ஆற்காடு தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வாகியிருந்தார்.
இதேபோன்று 2001 மற்றும் 2006ஆம் ஆண்டு தேர்தலில் அணைக்கட்டு தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பாண்டுரங்கன், ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ளார்.
அணைக்கட்டு தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் சுமார் 40 விழுக்காடு அளவு உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பது இவர்கள் தான். மேலும், யாதவர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் முதலியார் சமூகத்தினரும் கணிசமான அளவில் இருக்கின்றனர்.
அணைக்கட்டு தொகுதியில் 2016 மற்றும் 2021 என அடுத்தடுத்து இரண்டுமுறை எம்எல்ஏவான திமுகவின் A.P. நந்தகுமாருக்கே இம்முறையும் சீட் கிடைக்கும் என்று பேசப்படுகிறது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன், முன்னாள் எம்எல்ஏ சி.கோபு, கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற D. வேலழகன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
கடந்த தேர்தலில் நந்தகுமார் சுமார் 95,000 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுகவின் வேலழகனுக்கு சுமார் 89,000 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சியின் சுமித்ரா சுமார் 8,000 வாக்குகளைப் பெற்றார்.
2026 தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில், திமுக- அதிமுக இடையேதான் போட்டி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
விஜய் கட்சியின் வருகை பிரதான கட்சிகள் மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியின் வாக்குகளையும் பாதிக்கும் எனப் பேசப்படுகிறது.
