சென்னை,ஜன.20; 2026-ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (20.01.2026) பெரும் பரபரப்புடன் தொடங்கியது. மரபுப்படி ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டிய இந்த கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கீதம் சர்ச்சை: கவர்னர் வெளியேறியது ஏன்?
இன்று காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
சட்டப்பேரவை கூட்ட அரங்கத்திற்கு ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு சென்றார். அங்கு நின்றபடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
உரை நிகழ்த்தத் தொடங்கியதும் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக்கூறி வெளிநடப்பு
சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தத் தொடங்கினார். பொதுவாக, ஆளுநர் உரை நேரலையாக வழங்கப்படும். ஆனால், இன்று நேரலை வழங்கப்படவில்லை.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையைத் தொடங்க முற்பட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், தனது உரையைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு அவையிலிருந்து வெளியேறினார்.
4-வது ஆண்டாக தொடரும் மோதல்
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு நான்காவது ஆண்டாகத் தொடர்கிறது.
2023: பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற பெயர்களை வாசிக்காமல் தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
2024 & 2025: தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி உரையைப் புறக்கணித்தார்.
2026: தற்போதும் அதே காரணத்தை முன்வைத்து ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார்.
ஆளுநர் மாளிகையின் விளக்கம்
வெளிநடப்பு செய்த பிறகு ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அரசு தயாரித்த உரையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. போதைப்பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி
ஆளுநரின் இந்தச் செயலுக்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற அண்ணாவின் கூற்றை ஆளுநரின் செயல் உறுதிப்படுத்துகிறது. அவர் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார்” என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், இனிவரும் காலங்களில் ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை என்ற நடைமுறையைத் தவிர்க்கச் சட்டத் திருத்தம் கொண்டுவரப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வருமா?
தமிழ்நாடு வரலாற்றில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான இந்த இடைவிடாத மோதல், ஜனநாயக மாண்புகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் விவாதிக்கப்பட வேண்டிய சட்டப்பேரவையில், இத்தகைய முரண்பாடுகள் தொடர்வது தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
