Skip to content

கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம்; வைரல் வீடியோ சர்ச்சையும் பின்னணியும்!

பெங்களூரு,ஜன.20; கர்நாடக காவல்துறையின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான டிஜிபி அந்தஸ்தில் இருந்த ராமச்சந்திர ராவ், சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சைக்குரிய வீடியோக்களைத் தொடர்ந்து அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அம்மாநில அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய வீடியோவும் அரசு நடவடிக்கையும்

கர்நாடக சிவில் உரிமைகள் அமலாக்கப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ். சமீபத்தில், இவர் தனது அலுவலகத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவின.

சர்ச்சைக்குரிய வீடியோவால் பொதுமக்கள் மத்தியில்அதிருப்தி

இந்த வீடியோக்கள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ராமச்சந்திர ராவ் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமச்சந்திர ராவ் அளித்துள்ள விளக்கம்

தனது மீதான புகார்களை மறுத்துள்ள ராமச்சந்திர ராவ், இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், அவை தொழில்நுட்ப உதவியுடன் (AI/Morphed) ஜோடிக்கப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

வைரல் வீடியோக்கள்புனையப்பட்டவை என டிஜிபி விளக்கம்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”இந்த வீடியோக்கள் எனது நற்பெயரைக் கெடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை, சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பெலகாவியில் இருந்தபோது எடுக்கப்பட்ட பழைய காட்சிகளாக இருக்கலாம் அல்லது முற்றிலும் புனையப்பட்டவையாக இருக்கலாம் என்றும் விளக்கமளித்தார்.

உள்துறை அமைச்சரைச் சந்தித்து இது குறித்து விளக்கமளிக்க முயன்றேன், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.

நடிகை ரன்யா ராவ் மற்றும் தங்கம் கடத்தல் வழக்கு

இந்தச் சர்ச்சைக்கு மற்றொரு முக்கியக் காரணமாக ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளும், கன்னட நடிகையுமான ரன்யா ராவ் மீதான வழக்குகள் பார்க்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த புகாரில் ரண்யா ராவ் கைது செய்யப்பட்டார்.

அப்போது, நடிகை ரன்யா ராவ் தனது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் சிறப்பு சலுகைகளைப் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக ராமச்சந்திர ராவ் ஏற்கனவே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு

உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி மீது எழுந்துள்ள இந்த ஒழுக்கக்கேடு புகார், காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தற்போதைய நிலையில் விசாரணை நிலுவையில் உள்ளதால், வீடியோவின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *