நொய்டா,ஜன.20; நொய்டாவில் மென்பொருள் பொறியாளர் யுவராஜ் மெஹ்ரா உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மீட்புப் படையினரின் அலட்சியத்தைக் கண்டித்து பிரபல நடிகர் அபினவ் சுக்லா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?
சில தினங்களுக்கு முன்னர் கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த இடத்தின் சுவர் மீது மோதிய யுவராஜ் மெஹ்ராவின் கார், அங்கிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக பார்வைத் திறன் குறைந்ததால் இச்சம்பவம் நிகழ்ந்தது. விபத்து நடந்த உடனேயே, யுவராஜ் தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றுக்குத் தகவல் அளித்தார்.
அவர் ஒருவழியாக காரின் மீது ஏறி நின்றவாறு, கூக்குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார். அதேவேளையில், கார் மெல்ல மெல்ல நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது.
ஆபத்தில் சிக்கியவர் நீரில் மூழ்குவதை வேடிக்கை பார்த்த மீட்புக்குழு
இரண்டு மணி நேரப் போராட்டம்: சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் கிரேன் மற்றும் கயிறுகளுடன் வந்தனர். ஆனால், ஒரு அதிகாரி கூட நீரில் இறங்கி இளைஞரை மீட்க முன்வரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
யுவராஜின் தந்தையும் சம்பவ இடத்திற்கு வந்து அழுதபடியே குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் கார் நீரில் மூழ்கியதில் இளைஞர் யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
2 மணிநேரம் உயிருக்கு போராடிய இளைஞர்
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீட்புப்படையினருக்கு பிரபல இந்தி நடிகர் அபினவ் சுக்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அந்த இளைஞன் சுமார் இரண்டு மணி நேரம் மூழ்கிக்கொண்டிருந்த காரின் மேல் நின்று கொண்டு உதவிக்காகக் கத்தினான். உயிர் பிழைக்கப் போராடினான். ஆனால், மீட்புப் பணியை மேற்கொள்ள வேண்டிய துறையினர் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அதிர்ச்சியளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
டெலிவரி பாயின் துணிச்சல் – அதிகாரிகளுக்குச் சாடல்
மீட்புக் குழுவினர் தயங்கிய நிலையில், அங்கிருந்த ஃபிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் துணிச்சலுடன் தனது உடம்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கி இளைஞரை மீட்க முயன்றார். இருப்பினும், இறுதியில் யாராலும் அந்த இளைஞரைக் காப்பாற்ற முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புப்பணியே தெரியாதவர்கள் மீட்புக்குழுவில் இருப்பதா?
இது குறித்து அபினவ் சுக்லா கூறுகையில், “மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்தத் துறைகள் ஒரு அடிப்படை மீட்புப் பணியைக் கூட செய்யத் தவறிவிட்டன. சம்பவ இடத்திற்குச் சென்ற அனைத்து அதிகாரிகளும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். தகுதியற்றவர்களைப் பணியமர்த்துவதை நிறுத்திவிட்டு, துணிச்சலான வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்,” எனச் சீறியுள்ளார்.
ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருந்த அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததும், ஒரு சாமானிய டெலிவரி ஊழியர் காட்டிய துணிச்சலும் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
