Skip to content

சவுக்கு சங்கர் வழக்கு; “நீதிமன்றத்தை மிரட்ட முடியாது” – விலக மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை, ஜன.21; பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால பிணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலக சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள், நீதிமன்ற மாண்பு குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

பிணையை ரத்து கோரும் தமிழ்நாடு அரசு

கடலூர் சிறையில் இருந்த சவுக்கு சங்கருக்கு, அவரது உடல்நிலை மற்றும் தொடர் கைது நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் மாதம் உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு இடைக்கால பிணை வழங்கியது. இருப்பினும், பிணையில் வெளிவந்த பிறகு அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பேசி வருவதாகவும், சாட்சிகளை அச்சுறுத்துவதாகவும் கூறி சென்னை காவல்துறையினர் அவரது பிணையை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தை பிளாக்மெயில் செய்யாதீர்கள்: நீதிபதிகள் அதிருப்தி

இந்த வழக்கு நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (20.01.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர், “முந்தைய விசாரணையின் போது நீதிபதி சங்கரை ‘பிளாக்மெயிலர்’ என்று குறிப்பிட்டதால், இந்த அமர்வு வழக்கை விசாரிக்கக் கூடாது, நீதிபதிகள் விலக வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞருக்கு நீதிபதி பதில்

“என்னுடைய 21 ஆண்டு கால நீதித்துறை பணியில், நான் ஒருமுறை கூட வழக்குகளில் இருந்து விலகியதில்லை; நாங்கள் எங்கள் மனசாட்சிப்படிதான் செயல்படுகிறோம்; உங்கள் மிரட்டல்களுக்கெல்லாம் நீதிமன்றம் அஞ்சாது; யூடியூபில் பேசுவது போல நீதிமன்றத்தில் நீங்கள் இஷ்டப்படி செயல்பட முடியாது,” என்று வேல்முருகன் கடுமையாகச் சாடினார்.

நிர்வாக ரீதியான அதிகாரம் மட்டுமே வழி

நீதிபதிகள் தரப்பில் மேலும் கூறுகையில், “எங்களுக்கு எதிராக உள்நோக்கம் கற்பிப்பதை ஏற்க முடியாது; உங்களுக்கு இந்த அமர்வில் விருப்பமில்லை என்றால், நீங்கள் தலைமை நீதிபதியை அணுகி வழக்கை மாற்றக் கோரலாம்; ஆனால், தலைமை நீதிபதி உத்தரவிடாத வரை நாங்களே இந்த வழக்கை விசாரிப்போம்,” என்று தெளிவுபடுத்தினர்.

மேலும், சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டதையும், பதிலளிக்கக் கால அவகாசம் கோருவதையும் நீதிமன்றம் கவனிப்பதாகக் குறிப்பிட்டனர்.

சவுக்கு சங்கரின் பிணை நீடிக்குமா?

சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றம் மற்றும் தனிநபர் விமர்சனங்களுக்கு இடையிலான எல்லைக்கோடு மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. “நீதிமன்றம் என்பது ஒரு தனிநபரால் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் இயக்கப்படுவது அல்ல; அது ஒரு அமைப்பு” என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளது சட்ட வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை சவுக்கு சங்கரின் இடைக்கால பிணை நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *