Skip to content

மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது அமமுக! “விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதில்லையாம்”- டிடிவி தினகரன் விளக்கம்

சென்னை, ஜன.21; தமிழ்நாடு அரசியலில் நிலவி வந்த பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அமமுக (AMMK) மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியைக் கைப்பற்றவும் தீவிரமாக களமாடி வருகின்றன.

தேர்தலில் 4 முனைப்போட்டி ஏறக்குறைய உறுதி

ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதுபோக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக்கு பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று கூறிவருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தது அமமுக!

அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணியின் பாமக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தநிலையில் அதிமுக-பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (21.01.2026) அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் அந்தக் கூட்டணியில் இணைவதாக தினகரன் அறிவித்துள்ளார்.

“தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்போம்”

சென்னையில் நடைபெற்ற அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.

“விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போனதில்லை”

பழைய விசயங்களை மனதில் வைத்துக்கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்குத் தள்ளிவிடக்கூடாது-எங்களுக்குள் நடப்பது பங்காளிச் சண்டைதான் – விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போனதில்லை என்று தினகரன் தெரிவித்தார்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல்…” என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம்- மக்கள் விரும்பும் நல்லாட்சி தமிழ்நாட்டில் அமைந்திட உறுதுணையாக இருப்போம் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *