டாவோஸ், ஜன.22; கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்திருந்த வர்த்தக வரி (Tariff) மிரட்டலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் (WEF), நேட்டோ (NATO) பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவைச் சந்தித்த பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிரீன்லாந்து ஏன் டொனால்டு டிரம்பிற்கு முக்கியம்?
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப்போவதாக டிரம்ப் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாகப் பேசி வந்தார். இது அமெரிக்காவின் பாதுகாப்பு சார்ந்த விவகாரம் என்றும், ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வாதிட்டார்.
டிரம்பின் முடிவை தீவிரமாக எதிர்த்த கிரீன்லாந்து
ஆனால், கிரீன்லாந்தின் இறையாண்மையைக் கொண்டுள்ள டென்மார்க் மற்றும் அந்தத் தீவின் உள்ளூர் அரசு, “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தன. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், டென்மார்க் மற்றும் அதற்கு ஆதரவாக நிற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகள் மீது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக எச்சரித்திருந்தார்.
நேட்டோவுடன் ஏற்பட்ட உடன்பாடு-முடிவில் மாற்றம்
டாவோஸில் மார்க் ரூட்டேவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட டிரம்ப், “நேட்டோவுடன் ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து ஒரு பொதுவான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த வர்த்தக வரிகளை நான் விதிக்கப்போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் அவர் இன்னும் வெளியிடவில்லை. “நாங்கள் ஒரு ஒப்பந்தத்தின் வரைவை எட்டியுள்ளோம்” என்று மட்டும் அவர் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் ஆற்றிய எதிர்வினை
முன்னதாக, டிரம்பின் இந்த வரி மிரட்டலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இது ஒரு “பொருளாதார மிரட்டல்” என்றும், அமெரிக்கா வரி விதித்தால் ஐரோப்பாவும் பதிலுக்குப் பெரிய அளவில் வரி விதிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. தற்போது டிரம்ப் பின்வாங்கியிருப்பது சர்வதேச சந்தையில் நிலவி வந்த பதற்றத்தைத் தணித்துள்ளது.
டிரம்பின் அறிவிப்பால் வர்த்தகப் போர் தவிர்ப்பு
டிரம்பின் இந்த அறிவிப்பு தற்காலிகமாக ஒரு வர்த்தகப் போரைத் தவிர்த்துள்ளது. கிரீன்லாந்தை முழுமையாக அமெரிக்காவின் வசம் கொண்டுவருவதில் அவர் இன்னும் பிடிவாதமாக இருந்தாலும், நேட்டோ நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படாமல் தடுக்க இப்போதைக்கு அவர் இறங்கி வந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த முடிவு உலகப் பொருளாதாரத்திற்குச் சாதகமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
