சென்னை, ஜன.24; சென்னையில் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து 15 ஆண்டுகால கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இணைந்து ஐஸ்கிரீம் உண்ணும் சங்கிலித் தொடரை உருவாக்கி இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
உலக சாதனை நிகழ்வு
சென்னை நீலாங்கரையில் உள்ள R.K.Convention Center கடந்த புதன்கிழமையன்று (21.01.2026) இந்த பிரமாண்ட நிகழ்வு நடைபெற்றது. ‘அருண் ஐஸ்கிரீம்ஸ்’ நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், சென்னையின் எட்டு முன்னணி பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 4,008 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முறியடிக்கப்பட்ட பழைய சாதனை
இதற்கு முன்பு, 2011ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதியன்று இங்கிலாந்தில் உள்ள ‘மொரெல்லிஸ் ஆஃப் போர்ட்ஸ்டீவர்ட்’ (Morelli’s of Portstewart) என்ற நிறுவனம் 2,728 பேரைக் கொண்டு இந்த சாதனையைப் படைத்திருந்தது. தற்போது 4,000-க்கும் மேற்பட்ட சென்னை மாணவர்கள் அந்த சாதனையைத் தகர்த்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
மாணவர்கள் காட்டிய உற்சாகம்
இந்த சாதனை முயற்சியின் விதிமுறைப்படி, மாணவர்கள் ஒரு மனித சங்கிலியை உருவாக்கி, தங்கள் வலது கையில் ஐஸ்கிரீமை பிடித்துக்கொண்டு, அருகில் இருப்பவருக்கு ஐஸ்கிரீம் ஊட்ட வேண்டும். இந்த செயல்முறை ஒரு நிமிடம் வரை நீடிக்க வேண்டும். ‘ஜாலி டிரெய்ன்’ (Jolly Train) எனப்படும் பட்டர்ஸ்காட்ச் மற்றும் சாக்லேட் சுவை கொண்ட ஐஸ்கிரீம்களை மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ருசித்தனர்.
அதிகாரப்பூர்வ அங்கீகாரம்
இந்த நிகழ்வை கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நடுவர் ரிச்சர்ட் வில்லியம் ஸ்டென்னிங் மற்றும் புனே கின்னஸ் குழுவைச் சேர்ந்த மிலிந்த் வெர்லேகர் ஆகியோர் நேரில் கண்காணித்தனர். சாதனையை உறுதி செய்த பின், ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் (Hatsun Agro Product) நிறுவனத்தின் துணைத் தலைவர் சி. சத்யனிடம் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி, நாராயணா குழுமப் பள்ளிகள், ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி உள்ளிட்ட எட்டு பள்ளிகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
ஐஸ் கிரீம் தின்னக் கூலியா?
சென்னையில் நிகழ்த்தப்பட்ட இந்த கின்னஸ் சாதனை, மாணவர்களின் ஒற்றுமையையும் உற்சாகத்தையும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. சிறுவயது நினைவுகளில் அழியாத ஒரு மகிழ்ச்சியான தருணமாக இந்த ஐஸ்கிரீம் திருவிழா அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
