Skip to content

மெரினா கடற்கரை மணற்பரப்பில் வாழ்வாதாரப் போர்: ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலம் என்ன?

சென்னை,ஜன.25; சென்னை மாநகரின் அடையாளம் மெரினா கடற்கரை. ஆனால், இன்று அந்த அழகிய கடற்கரையின் மணற்பரப்பு ஒரு வாழ்வாதாரப் போராட்டக் களமாக மாறியுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது.

நீலக் கடற்கரை சான்றிதழ் பெற அழகுபடுத்தும் திட்டம்

சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் தின்பண்டங்கள், பொம்மைகள், துணிமணிகள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் 1,417 அங்கீகரிக்கப்பட்ட கடைகள் இயங்கி வந்தன.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் (Blue flag) ப்ளூ ஃபிளாக் தரச்சான்று பெறுவதற்காக மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடற்கரையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகராட்சி கடைகளை அகற்றி வருகின்றது.

குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி

இது தொடர்பான வழக்கில், மெரினா கடற்கரை “ஷாப்பிங் மாலா”? எனக்கேள்வி எழுப்பியிருந்த சென்னை உயர் நீதிமன்றம், குலுக்கல் முறையில் 300 கடைகள் மட்டுமே நடத்த அனுமதிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

அதற்கிணங்க கடற்கரையில் உள்ள கடைகளை மாநகராட்சி அகற்றி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கிப்படுகிறது.

மெரினா வியாபாரிகளின் முக்கியத்துவம்

மெரினா கடற்கரைக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்யும் இந்த வியாபாரிகள், வெறும் தின்பண்டங்கள் விற்பவர்கள் மட்டுமல்ல. இவர்கள் கடற்கரையின் பாதுகாப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர். “நாங்கள் இங்கே கடை வைத்திருப்பதால் தான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. வியாபாரிகள் இருக்கும் இடங்களில் குற்றச்சம்பவங்கள் குறைவாகவே நடக்கிறது,” என்பது அங்குள்ள சங்கங்களின் வாதம்.

(Blue flag) ப்ளூ ஃபிளாக் திட்டம் பல தலைமுறைகளாக இங்கு வியாபாரம் செய்து வரும் குடும்பங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரிகளின் கோரிக்கைகள்

வாழ்வாதாரப் பாதுகாப்பு: பல ஆண்டுகளாக இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒழுங்குமுறை: கடைகளை அகற்றுவதற்குப் பதிலாக, அவற்றை முறைப்படுத்தி அழகிய முறையில் அமைக்க ஒத்துழைக்கத் தயார்.

பாதுகாப்பு: தங்களை வெளியேற்றினால் கடற்கரையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச தரமா? ஏழை மக்களின் வாழ்வாதாரமா?

மெரினாவை அழகுபடுத்துவது அவசியம் என்றாலும், அதே சமயம் அந்த மண்ணையே நம்பி வாழும் மீனவ மற்றும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது நியாயமற்றது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. நவீன வசதிகளும், பாரம்பரிய வாழ்வியலும் கைகோர்த்துச் செல்லும் ஒரு தீர்வே இதற்குச் சரியான பதிலாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *