டெல்லி,ஜன.25; சர்வதேச கிரிக்கெட் உலகையே பிளாக்மெயில் செய்ய முயற்சிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மோசின் நக்வி மீது முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து நக்வி தெரிவித்த கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
வங்கதேசத்திற்கு ஆதரவும் நக்வியின் சர்ச்சைப் பேச்சும்
டி20 உலகக் கோப்பை தொடரில், சமீபத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் விளையாட மறுத்ததையடுத்து, ஐசிசி அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தைச் சேர்த்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த மோசின் நக்வி, ஐசிசி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், பாகிஸ்தான் இந்தத் தொடரில் பங்கேற்பது குறித்து அந்நாட்டு அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என்றும், தேவையெனில் பாகிஸ்தானுக்குப் பதிலாக 22ஆவது அணியை ஐசிசி தேடிக்கொள்ளலாம் என்றும் அதிரடியாகக் கூறினார்.
முட்டாள்தனமான வீரம் என அதுல் வாசன் காட்டம்
நக்வியின் இந்த கருத்தை ‘முட்டாள்தனமான வீரம்’ (Foolish Bravado) என்று சாடியுள்ள முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன், கிரிக்கெட்டில் அரசியலைப் புகுத்துவது விளையாட்டிற்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.
“சர்வதேச கிரிக்கெட் அமைப்பை மிரட்டிப் பார்க்க நக்வி முயல்கிறார்; இது கிரிக்கெட் உலகையே பிளாக்மெயில் செய்யும் செயலாகும்; இத்தகைய அரசியல் முடிவுகளால் பாதிக்கப்படப் போவது என்னவோ வீரர்கள் தான்; வங்கதேசத்திற்கு ஆதரவு அளிப்பதன் மூலம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்” என்றும் அதுல் வாசன் மேலும் தெரிவித்தார்.
ஐசிசி-யின் அதிரடி மாற்றங்கள்
வங்கதேசம் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, டி20 உலகக்கோப்பை அட்டவணையில் ஐசிசி மாற்றங்களைச் செய்துள்ளது. வங்கதேசம் இடம்பெற்றிருந்த பிரிவில் தற்போது ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது போட்டிகளை இலங்கையில் விளையாட ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது விலகல் குறித்துப் பேசுவது உள்நோக்கம் கொண்டது என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விளையாட்டு உறவை மேம்படுத்த உதவ வேண்டுமே தவிர…
விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இத்தகைய பிடிவாதமான போக்கு, அந்த நாட்டு வீரர்களின் எதிர்காலத்தையும், உலக கிரிக்கெட்டின் சமநிலையையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐசிசி இந்த விவகாரத்தில் எத்தகைய இறுதி முடிவை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
