ஜோலார்பேட்டை தொகுதி எண் – 49
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்த நாட்றாம்பள்ளி தொகுதி, மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை தொகுதி உருவாக்கப்பட்டது.
இத்தொகுதியில் அதிமுகவின் கே.சி. வீரமணி இரண்டு முறை வென்று, இருமுறையும் அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
தற்போது எம்எல்ஏவாக இருக்கும் திமுகவின் தேவராசு வாணியம்பாடியைச் சேர்ந்தவர்.
ஜோலார்பேட்டை தொகுதியில் 70 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வன்னியர் சமூகத்தினர் தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். இவர்கள் தவிர பிற சமூகத்தினர் 30 சதவீதம் உள்ளனர்.
வரும் தேர்தலில் திமுகவில் சிட்டிங் எம்எல்ஏவான தேவராசுக்கே சீட் கிடைக்கும் எனப் பேசப்படுகிறது. அதிமுகவில் கே.சி.வீரமணியே மீண்டும் களமிறங்குகிறார்.
கடந்த தேர்தலில் தேவராசு சுமார் 89,000 வாக்குகளைப் பெற்றார். கே.சி. வீரமணிக்கு 88,000 வாக்குகள் கிடைத்தன. வெற்றி வாக்கு வித்தியாசம் சுமார் 1,100 தான். நாம் தமிழர் கட்சியின் ஆ.சிவா 13,000 வாக்குகளைப் பெற்றார்.
திமுக எம்எல்ஏ தேவராசு கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, தொகுதியில் தங்காதது ஆகிய காரணங்களால் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் தவெக கட்சிக்கு முதல் முறையாக வாக்கு செலுத்துவோரின் ஆதரவு அதிகமாக கிடைக்கும் என நம்பப்படுவதால் அவர் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்.
தற்போதைய சூழலில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.